வா வா பூமழையே!

0
வா வா பூமழையே!

கறுத்தமேகங்கள் புடைசூழ

வானவேடிக்கைகள் வெடித்தபடி

வந்திறங்கும் மாமழையே

வாசம்வீசிடும் வான்மழையே


உன்னைக்கண்டதும்

கறுப்புக்கொடி காட்டி

கண்டனம் தெரிவிக்கப்போவதில்லை

சட்டென்று எழுந்து சன்னலை

சாத்தப்போவதுமில்லை


பொசுபொசுவென

தூறும் தூறலே -நீ

பொல பொலவென்று

கொட்டும்போது

கழுத்தை நிமிர்த்தி

கைகளை விரித்து

தட்டாமலைச் சுற்றியபடி

தாவித்தாவிஉனைப்பிடிப்பேன்


அத்துமீறி

எனைத்தொடவே உனக்குமட்டும்

அனுமதிப்பேன்

அர்த்தஜாமத்தில் வந்தாலும்

ஆசையோடு உன்னை

வரவேற்பேன்


சுகமில்லாமல் வீட்டுக்குள்

சுருண்டு படுத்திருந்தாலும்

உன்ஓசைக்கேட்டவுடன்

ஓடிவந்திடுவேன்

சன்னல் வழியே

என்கைகளை நீட்டி

உன்கரம்பிடித்துக் கூத்தடிப்பேன்

என்கயல்விழிமேல்

உன்துளிதெறிக்க

கண்சிமிட்டியபடியே ரசித்திடுவேன்


பஞ்சமென்று வரும்போது

பூமியிலுள்ள புஞ்சைகளுக்கு

புத்துயிர் தந்து புணர்வாழ்வளிப்பாய்

உன்ஒவ்வொரு

துளியிலும் மருந்துண்டு

வேர்களின் உயிர்களுக்கு

உரம்தந்து காப்பாற்றிடுவாய்


மகிழ்ச்சி தந்திடும் மாமழையே

மண்வாசம் தந்திடும் பூமழையே

மனிதனைத் தழுவி செல்வதுபோல்

மனதின் அழுக்கைக்

கழுவித்துடைப்பாயா


நீ,,,

அளவோடு வந்தால்

ஆனந்தம் அதிகரிக்கும்

அளவுக்கு மீறீவிட்டால்

அழிவுகள் ஆர்ப்பரிக்கும்

வளமோடு வா வான்மழையே

எங்களுக்கு

வளமான வாழ்வுகொடு

பூமழையே..

 

நன்றி